கோடைகாலத்தில்  உண்ண வேண்டிய பழங்கள்

இந்த கோடை நாட்களில் உங்கள் உடலை நன்கு ஹைட்ரேட்டாக வைத்திருக்க, நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்வது முக்கியம். நாளொன்றுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீரை குடிக்க முடியாதவர்களுக்கு நீர்ச்சத்து மிக்க பழங்கள் மற்றும் காய்கறிகள் பெரிதும் உதவும். இது உங்களை ஊட்டமாகவும் மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். கோடையில் வெயில் தாக்கம் அதிகம் இருப்பதால் சோர்வாக உணர்ந்தாலும் சந்தையில் கிடைக்கும் சீசன் உணவுகளான தர்பூசணிகள், ஸ்ட்ராபெரிகள், அன்னாசிப்பழங்கள் மற்றும் பல வகை பருவகால பழங்கள் நம்மை உற்சாகப்படுத்தும். உங்கள் அன்றாட டயட்டில் சேர்த்து கொள்ள சில சுவையான கோடைகால பழங்களின் வகைகள் கீழே.

மாம்பழம்: மாம்பழங்களை விரும்பாதவர் யார்? சந்தேகத்திற்கிடமின்றி கோடை காலத்தில் அனைவருக்கும் பிடித்த பழம் பல வெரைட்டிகளில் கிடைக்கும் மாம்பழங்கள் தான். பல இனிப்பு வகைகளிலும் மாம்பழம் பயன்படுத்தப்படுகிறது. மேங்கோ ஷேக் முதல் மேங்கோ சாலடுகள் வரை, இந்த பழம் பல்வேறு சமையல் ரெசிபிகளில் பயன்படுத்தப்படுகிறது. இவை ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கண் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.

தர்பூசணி: வீட்டை விட்டு வெளியே சென்று பார்த்தால் இன்று நாம் அதிகம் காணக்கூடிய கடைகளில் ஒன்றாக இருக்கும் தர்பூசணி விற்கும் கடைகள். கோடைகாலத்தில் பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய பழங்களில் தர்பூசணி முக்கியமான ஒன்று. சுமார் 90 சதவீதம் நீரை கொண்டுள்ள இந்த பழம் இதய நோய்களைத் தடுக்க உதவுவதோடு நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கிய செயல்பாட்டிற்கு உதவுகிறது.

ஸ்ட்ராபெரிஸ்: ஸ்ட்ராபெரிக்கள் இதய நோயை தடுப்பதில் மற்றும் LDL எனப்படும் கெட்ட கொழுப்பை குறைப்பதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. இதில் வைட்டமின் சி, மாங்கனீஸ், ஃபோலேட், பொட்டாசியம், பி வைட்டமின்கள் மற்றும் ஃபிளாவனாய்ட்ஸ் உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக ஸ்ட்ராபெர்ரியில் ஃபைபர் சத்து அதிகம் இருப்பதால் செரிமான சிக்கலை தீர்க்க உதவுகிறது.

அன்னாசிப்பழம்: வைட்டமின் சி அன்னாசிப்பழத்தில் அதிகம் உள்ளது, இது செல் சேதத்தை எதிர்த்து போராட மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இதில் அதிகம். நார்ச்சத்து நிறைந்த மற்றும் குறைந்த கலோரி கொண்ட அன்னாசியை கோடை காலத்தில் சாப்பிடுவது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சேதமடைந்த மற்றும் இறந்த செல்களை வெளியேற்ற உதவுகிறது.

ஆப்பிள்: கிட்டத்தட்ட எல்லா சீசன்களிலும் பிரபலமானது ஆப்பிள். இது ஒரு சுவையான மற்றும் சத்தான பழம் என்பது அனைவருக்குமே தெரியும். இதில் அடங்கி உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது என பல நன்மைகளை செய்கின்றன.

பப்பாளி: வைட்டமின் சி, ஃபைபர் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பப்பாளியில் அதிகம் உள்ளது. தமனிகளில் கொலஸ்ட்ரால் உருவாவதை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் வைட்டமின்களின் சிறந்த ஆதாரமாக இது இருக்கிறது.

ஆரஞ்சு: நம் உடலை ஹைட்ரேட் செய்து உற்சாகமாக வைப்பதில் ஆரஞ்சு பழத்தின் பங்கு முக்கியமானது. ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் இதய செயல்பாடு மேம்படும் மற்றும் இதில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் சரும ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

கிர்ணிப்பழம்: சம்மர் சீசனில் அதிகம் கிடைக்க கூடிய பழங்களில் முக்கியமான ஒன்று இந்த கிர்ணிப்பழம். இதில் நிரம்பி இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஏ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள அதிக பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.

Spread the love