காலநிலை மாற்றம்; பாதிக்கப்படும் நாடுகளுக்கு இழப்பீடு வழங்க முடிவு

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு நிதி இழப்பீடு வழங்க எகிப்தில் நடைபெற்று வரும் ஐ.நா.வின் காலநிலை மாற்ற வருடாந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற பணித்திட்டப் பேரவை 1992இல் உருவாக்கப்பட்டது. இந்த பேரவையில் 197 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவ்வாறான நிலையில் இப்பேரவை வருடாவருடம் மாநாட்டை நடத்தி காலநிலை மாற்றத்தை எதிர் கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்து வருகின்றன.

இதன் அடிப்படையில் இவ்வருடம் பேரவையின் 27ஆது கூட்டம் எகிப்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 6ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. இம் மாநாடு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இவ்வாறான நிலையில் இக் கூட்டத்தில் கால நிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு சேத நிதி இழப்பீடு வழங்க பேரவையிலுள்ள 193 நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற குழுவின் தலைவர் சைமன் ஸ்டீல் இது முன்னேற்றத்தை குறிக்கிறது. நாடுகள் இந்தமுறை ஆக்க பூர்வமான அணுகுமுறையை எடுத்துள்ளன என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட வளரும் நாடுகள், தனி தீவுகள், ஆபிரிக்க நாடுகள், பழங்குடி சமூகங்கள் கால நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு வளர்ந்த நாடுகளிலிருந்து இழப்பீடு கேட்டுள்ளன. இந்த நிலையில் மாநாட்டில் எடுக்கப்பட்ட இந்த முடிவு வரவேற்பை பெற்றுள்ளன. கால நிலை மாற்றத்தினால் உலக நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. பெரும் வெள்ளம், புயல், அதீத மழையினால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ஏற்படுகின்றன.

மேலும் ஆர்டிக், அண்டார்டிக்கா கண்டங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதால் உலக நாடுகள் பெரும் அபாயத்தை எதிர்கொள்ள இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கால நிலை மாற்றத்தை சமாளிக்கவும், அதன் தீவிரத்தை குறைக்கவும் உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

Spread the love