கமத்தொழில் அமைச்சில் விசேட ஆய்வுப் பிரிவொன்றை நிறுவ தீர்மானம்

கமத்தொழில் அமைச்சில் விசேட ஆய்வுப் பிரிவொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது. கமத்தொழில் அமைச்சில் தற்போது விசேட விசாரணைப் பிரிவு ஒன்று இல்லாததால், அவ்வாறானதொரு பிரிவை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கமத்தொழில் அமைச்சில் 13 மேலதிக செயலாளர்கள் கடமையாற்றுகின்றனர் அவர்களில் சிலர் விவசாய சேவையிலிருந்தும் சிலர் நிர்வாக சேவையிலிருந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகளுக்கு கடமைகளை வழங்குவது தொடர்பில் அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அங்கு இந்த விசேட புலனாய்வு பிரிவின் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

கமத்தொழில் அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் இருந்து கிடைக்கப்பெறுகின்ற சில முறைகேடுகள் மற்றும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட சில தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் தாமதம் குறித்த விசாரணைகளை நடத்துவதற்கு பொருத்தமான பிரிவு இல்லாதது பாரதூரமானது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அதற்கு மாற்றாக தற்போது அமைச்சில் உள்ள மேலதிக செயலாளர் மற்றும் பணியாளர்களை நியமித்து இந்த விசேட புலனாய்வு பிரிவை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். குறிப்பாக கடந்த காலங்களில் உர விநியோகம், ஆசிய அபிவிருத்தி வங்கியினால் விவசாயிகளின் கணக்கில் பணத்தை முறையாக செலுத்துவதற்கு சரியான தகவல்களை வழங்காமை போன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை சீர்குலைக்கும் சில அதிகாரிகள் தொடர்பில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டிய போதிலும் அவ்வாறானதொரு திணைக்களம் அமைச்சில் இல்லாதது பாரிய குறைபாடாகும். எனவே இந்த விசேட விசாரணைப் பிரிவை விரைவில் நிறுவுமாறு அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்கவிடம் அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்தார்.

Spread the love