ஐ.எம்.எப்.பேச்சு வெற்றி பெற அமெரிக்கா உதவும், பிரதமருடனான சந்திப்பில் அமெரிக்க இராஜதந்திரிகள் உறுதி

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் (ஐ.எம்.எப்.) இடையே நடைபெறும் கலந்துரையாடல்கள் வெற்றி பெறுவதற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்புக்கள் கிடைக்குமென இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் உறுதியளித்துள்ளனர். அத்துடன் அரச நிதி முகாமைத்துவத்திற்கு தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க திறைசேரியின் ஆசியப்பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலாளர் ரொபோட் கப்ரொத் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலாளர் கெலி கெய் டெலிங் ஆகியோரை உள்ளடக்கிய  இராஜதந்திர குழு நேற்றுக்காலை இலங்கை தரப்புடனான பேச்சுக்களை ஆரம்பித்தது. இந்தக்குழு முதலில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு எத்தகைய உதவிகளை வழங்கமுடியும் என்பது குறித்து விரிவாக கலந்துரையாடல்களை மேற் கொண்டது.

பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே , சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் வெற்றி பெறுவதற்கு அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்புக்கள் கிடைக்குமெனவும் தங்களின் ஆதரவை வழங்குவதாக அமெரிக்க இராஜதந்திரிகள் உறுதியளித்தனர். இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கும் கலந்து கொண்டார். இது தொடர்பில் டுவிட்டர் பதிவிட்டுள்ள அவர் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை அமெரிக்க இராஜதந்திரிகளுடன் சந்தித்தோம். இலங்கை கடும் சவால்களை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், வளமான, பாதுகாப்பான மற்றும் ஜனநாயகம் மிக்க எதிர்காலத்தை அடைய உதவும் வகையில் நாம் தொடர்ந்தும் உதவுவதோடு, நீண்டகால கூட்டாண்மையையும் வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.

Spread the love