இலங்கையில் 6.2 மில்லியன் பேர் உணவு பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியுள்ளனர்: UNICEF அறிக்கை

இலங்கையில் 6.2 மில்லியன் பேர் உணவு பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியுள்ளதாக UNICEF தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பிலான UNICEF-இன் இரண்டாவது மனிதாபிமான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் தொடர்ச்சியாக பணவீக்கம் , உணவு பாதுகாப்பின்மை மற்றும் வறுமை அதிகரித்து வருவதாக UNICEF எனப்படுகின்ற ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் 6.2 மில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியுள்ளதாகவும் கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம், போஷாக்கு, சமூக பாதுகாப்பு மற்றும் நீர் ஆகியவற்றில் அதிகரித்த தேவைகள் மற்றும் சேவைகளின் சீர்குலைவு காரணமாக இலங்கையில் குழந்தைகளே நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் சுமார் 7,12,000 சிறார்கள் உட்பட ஒரு மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை UNICEF வழங்கியுள்ளது. உணவு பாதுகாப்பின்மையால் பெருமளவிலான பெற்றோர் தமது பிள்ளைகளை சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் அனுமதிக்க நிர்பந்திக்கப்படுவதாகவும் சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சிறுவர் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான மருத்துவ வசதிகள் பாதிப்படைந்தமை அச்ச நிலையைத் தோற்றுவித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Spread the love