எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தினால் அனுமதி வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்குமாறு எரிவாயு நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தரமற்ற வகையில் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்களை மீள பெற்றக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் இடைக்கால கட்டளையை பிறப்பித்து எரிவாயு நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தை மற்றும் நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு பதிலாக, தரமான புதிய சிலிண்டர்களை விநியோகிக்கும் போது கட்டணம் அறவிடப்படக்கூடாது எனவும் இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாகாநந்த கொடித்துவக்கினால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு மீதான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் விஜயரத்ன, ருவன் பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் மனு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மனு மீதான மேலதிக விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Spread the love