‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ நட்ட ஈட்டு வழக்கை சர்வதேச வர்த்தக நீதிமன்றுக்கு மாற்றுமாறு அறிவுறுத்தல்! 

‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பல் நட்டஈட்டு வழக்கை சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்திலிருந்து அந்நாட்டின் சர்வதேச வர்த்தக நீதிமன்றுக்கு மாற்றுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் எதிர்கால தீர்மானங்கள் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடப்பட்ட பின்னர் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படுமென சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நட்ட ஈடு தொடர்பான வழக்கு நேற்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​அந்நாட்டு நீதிமன்றம் இதனை தெரிவித்ததாக திணைக்களம் கூறியுள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. வழக்கானது குறித்த திகதிக்குள் சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமா, இல்லையா என்பதை அறிவிக்க வேண்டுமெனவும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பலால் ஏற்பட்ட பாதிப்பிற்கு நட்ட ஈட்டை அறவிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி  கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தாக்கல் செய்தது. 6.4 பில்லியன் டொலர் நட்ட ஈட்டை செலுத்தத் தவறினால், வழக்கு தாக்கல் செய்யப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் கிராமிய கடற்றொழில் அமைப்புகளால் குறித்த கப்பல் நிறுவனத்திற்கு கோரிக்கை கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அறிவிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் ‘எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பல் நிறுவனம் பதிலளிக்கத் தவறியதால், வணிக மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய இன்று நடவடிக்கை எடுத்துள்ளார்.

Spread the love