உலகில் தொடரும் பட்டினிச்சாவு

மனித வாழ்வு நாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டு விட்டதாகப் பெருமைபேசும் தற்காலத்தில் நான்கு செக்கனுக்கு ஒருவர் பட்டினியால் இறந்து கொண்டிருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை வேறு வகையில் கூறுவதானால், நாளொன்றுக்கு 19,700பேர் பட்டினியால் இறந்து கொண்டிருக்கின்றனர்.


பெறுமதியான மனித உயிர்கள் இவ்வாறு பலியாவது தடுக்கப்படக்கூடிய ஒரு விடயமாக இருந்தாலும் கூட, அரசாங்கங்கள் அது தொடர்பில் அக்கறை காட்டாமல் இருப்பது கவலை தரும் விடயமாகும்.


தற்சமயம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச் சபையின் 77ஆவது கூட்டத் தொடரை முன்னிட்டு 75நாடுகளைச் சேர்ந்த 238 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து உலக நாடுகளின் தலைவர்களின் கவனத்திற்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச தொண்டு அமைப்புகளான சேவ்த சில்ரன், கெயார், அக்சன் பாம், ஒக்ஸ்பாம். வேல்ட் விஷன் உள்ளிட்ட அமைப்புகள் இந்த அறிக்கையில் கையொப்பம் இட்டுள்ளன.


இந்த அறிக்கையின் பிரகாரம், உலகளாவிய அடிப்படையில் 345மில்லியன் மக்கள் பட்டினி நிலையை எதிர்கொண்டு உள்ளனர். 2019இல் இருந்த நிலையோடு ஒப்பிடும் போது இது இரண்டு மடங்குக்கும் அதிகமானதாகும். இந்தப்பட்டியலில் 2019இல் புதிதாக 150மில்லியன் மக்களும், 2020இல் 46மில்லியன் மக்களும் இணைந்து உள்ளனர்.

21ஆம் நூற்றாண்டில் பட்டினியற்ற உலகை படைக்கவிருப்பதாக உலக நாடுகளின் தலைவர்கள் உறுதி அளித்திருந்த போதிலும் யதார்த்தத்தில் நிலைமை தலை கீழாகவே உள்ளதைப் பார்க்க முடிகின்றது. பட்டினிச்சாவுக்குப் பேர்போன சோமாலியா மீண்டும் ஒருமுறை மோசமான பட்டினி நிலைமைக்குச் சென்றுள்ள அதேவேளை உலகின் 45நாடுகளில் வாழும் ஏறத்தாழ 50மில்லியன் மக்களும் மோசமான பட்டினி நிலையை நெருங்கி உள்ளனர் என்கிறது தொண்டு நிறுவனங்களின் அறிக்கை வறுமை, சமூக சமத்துவமின்மை, பால் சமத்துவமின்மை, ஆயுத மோதல்கள், காலநிலை மாற்றம், பொருண்மிய வளர்ச்சியின்மை போன்றவை இந்த நிலைக்கான அடிப்படைக் காரணங்கள் என்கின்றது இந்த அறிக்கை. இலங்கை போன்ற நாடுகளில் வசிப்போருக்கு, ஆட்சியாளர்களின் மோசமான ஆட்சி முறைமையும் இதற்கான காரணங்களுள் ஒன்று என்பது தெளிவாகவே புரியும்.


பெரும்பான்மையாக உள்ள சாதாரண மக்களின் நலன் கருதி பொருளாதாரக் கொள்கைகளை வகுக்காமல், பெருமுதலாளிகளின்நலனைக் கருத்தில் கொண்டு வரி அறவீடு உள்ளிட்ட கொள்கைகளை அரசாங்கங்கள் வகுப்பதும், வரிச்சலுகைகள், கடன் தள்ளுபடி உள்ளிட்ட வசதிகளை பெருமுதலாளிகளுக்கும், கம்பனிகளுக்கும் வழங்கும் கொள்கைகளை அரசாங்கங்கள் கடைப்பிடித்து வருவதையும் தற்காலத்தில் உலகளாவிய அடிப்படையில் அவதானிக்க முடிகின்றது. இத்தகைய போக்கு காரணமாக ஏழைகள் மென்மேலும் ஏழைகளாகிக் கொண்டு செல்ல, செல்வந்தர்கள் தமது சொத்துக்களை மென்மேலும் பெருக்கிக் கொள்வதையும் அவதானிக்க முடிகின்றது.

உலகமே எதிர்பார்த்திராத கொரோனாப் பெருந்தொற்று. அதன் விளைவால் ஏற்பட்ட முடக்கம், உற்பத்திப் பாதிப்பு, பொருளாதார வளர்ச்சி குன்றல் போன்றவை உலகளாவிய அடிப்படையில் மக்களைப் பட்டினி நிலைக்குத் தள்ளியுள்ளதை மறுப்பதற்கில்லை. அதனோடு இணைந்து இந்த வருடத்தின் ஆரம்பத்தில் உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள படையெடுப்பு, பாவனைப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, எரிபொருள் விலை உயர்வு என்பனவும் ஒரு செயற்கைப் பஞ்சத்துக்கு வழிவகுத்துள்ளது என்பதையும் நிராகரிக்க முடியாது. உக்ரேன் போருக்கு சமாதான வழியில் தீர்வு காண்பதை விடுத்து, அந்தப் போரை மென்மேலும் தீவிரம் மிக்கதாக மாற்ற மேற்குலகு கடைப்பிடித்துவரும் அணுகுமுறையானது உலகில் நிலவும் பட்டினிப் போக்கை மென்மேலும் அதிகரிக்கவும், நீடிக்கவுமே செய்யும் என்பது தெளிவானது.

உலகின் விவசாய ஏற்றுமதி நாடுகளின் வரிசையில் மூன்றாம் – நான்காம் இடங்களை முறையே ரஷ்யாவும் உக்ரேனுமே வகித்து வருகின்றன. அது மாத்திரமன்றி எரிபொருள் மற்றும் விவசாய உரங்கள் ஏற்றுமதியில் ரஷ்யா முக்கிய பங்கி எனயும் வகித்து வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

தற்போதைய ‘ஆண்’ மைய உலகில், எப்போதும் அதிகம் பாதிக்கப்படும் இடத்தில் பெண்களும், குழந்தைகளுமே இருந்து வருகின்றார்கள் என்பது மறைக்க முடியாத உண்மை . உலகளாவிய அடிப்படையில் நிலவும் பசி, பட்டினி விவகாரத்திலும் இந்த நிலை தொடரவே செய்கின்றது.


2020ஆம் ஆண்டில் மாத்திரம் உலகளாவிய அடிப்படையில் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் 22சதவீதமானோர் போசாக்குக் குறைபாட்டால் ஏற்படும் உள மற்றும் உடல் வளர்ச்சி குன்றும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6.7சதவீதமான குழந்தைகள் போசாக்கின்மை நோய்கள் காரணமாக மரணத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் உலகளாவிய அடிப்படையில் போசாக்கின்மை விடயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான இடைவெளி அதிகப்படியாக உள்ள பிராந்தியமாக தென் அமெரிக்கா, கரிபியன் மற்றும் ஆசியப்பிராந்தியங்கள் உள்ளன.

இந்தப் பிராந்தியங்களில் 31.9 சதவீதமான பெண்கள் போதுமான உணவைப் பெறமுடியாத நிலையில் உள்ளனர். ஆண்களைப் பொறுத்தவரை அவர்களின் சதவீதம் 27.6 ஆக உள்ளது. ஐ.நா. நிறுவனங்களான உலக சுகாதார நிறுவனம், உலக உணவுத் திட்டம் உணவு மற்றும் விவசாய நிறுவனம் ஆகியவை இணைந்து நடப்பாண்டின் ஜுலை மாதத்தில் வெளியிட்ட அறிக்கையொன்றில் உலக மக்கள் தொகையில் 828 மில்லியன், அதாவது 10சதவீதமானோர் கடந்த வருடத்தில் பட்டினி நிலையில் சீவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்த நிலையில் தற்போதைய அறிக்கை வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. மனித குலமே வெட்கித் தலை குனியக் கூடிய இந்த நிலைமை மாற்றப்படக் கூடியதா? ஆம், நிச்சயமாக மாற்றப்படக் கூடியதே. அதற்கு செல்வந்த நாடுகள் மனது வைக்க வேண்டும். வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களுக்கு அப்பால், ஐ.நா.சபையின் அமைப்புகளும் மூன்றாம் உலக நாடுகளில் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை நாமறிவோம்.


ஆனால், அத்தகைய நிறுவனங்களுக்குத் தேவையான நிதி மூலங்களைத் தடையின்றி வழங்குவதற்கு உலகின் செல்வந்த நாடான அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் முன்வருவதில்லை என்பதையும் நாமறிவோம். உலக மன்றமான ஐ.நா. சபைக்கான வருடாந்தக் கொடுப்பனவைக்கூட பல வருடங்களாக வழங்காமல் அமெரிக்கா இழுத்தடித்து வருகின்றது என்பது ஒன்றும் இரகசியம் அல்ல. மறுபுறம், அரசாங்கங்களைப் பொறுத்த வரை பணப்பயிர் உற்பத்தியில் காட்டும் ஆர்வத்தை மக்களின் அன்றாட உணவுக் தேவைக்கான பயிர்களின் உற்பத்தியில் காட்ட முனையாதவொரு புதிய போக்கை நாம் அண்மைக் காலமாக அவதானிக்க முடிகின்றது.

திறந்த பொருளாதாரக் கொள்கை என்ற அம்சத்தின் கீழும், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புக்களின் விதந்துரைகளின் அடிப்படையிலும், சர்வதேச வணிக நிறுவனங்களின் வேண்டுதல்களின் பிரகாரமும் இத்தகைய அபாயகரமான போக்கு உருவாகியுள்ளது. இந்த நிலையில் உடனடி மாற்றம் அவசியமாகின்றது.

உலகின் செல்வந்த நாடுகள் என்ற வரிசையில் இடம்பிடித்துள்ள நாடுகள் அந்த நிலையை எட்டுவதற்கு கைத்தொழில் புரட்சி கைகொடுத்திருந்தாலும், பெரும்பாலான நாடுகளின் காலனித்துவ வரலாறு இன்றைய நிலைக்குப் பிரதான காரணம் என்பதை மறுத்துவிட முடியாது. காலனித்துவ காலத்தில் தாம் மேற்கொண்ட அளவு கணக்கற்ற சுரண்டலும், அந்தந்த நாடுகளில் ஏற்படுத்திய பாதிப்புகளுமே மூன்றாம் உலக நாடுகளின் அவல நிலைக்குப் பிரதான காரணம் என்பதை செல்வந்த நாடுகள் ஒரு கணம் நினைத்தால் கூட, வறிய நாடுகளை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் சென்று இந்த பட்டினி – நிலைமைக்கு ஒரேயடியாக முடிவு கட்ட முடியும். இந்தத் திசையில் முதலாவது – காலடியை எடுத்து வைப்பது யார்?

credit to

Spread the love