இலங்கையில் இருந்து வரும் அகதிகளை கட்டுப்படுத்துவதில் அவுஸ்திரேலியா உறுதி!

இலங்கை கடும் பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுடன் போராடி வரும் நிலையில் அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் திருமதி கிளேர் ஓநீல் நேற்று திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்து வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஷை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று மாலை சந்தித்தார்.

சமீப வாரங்களில் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகில் பயணிக்கும் பல புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் இடைமறித்ததைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சரின் இந்தப் பயணம் அமைந்துள்ளது. படகில் வரும் மக்கள் அவுஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற செய்தியை அனுப்ப அரசாங்கம் இந்தப் பயணத்தைப் பயன்படுத்த விரும்புவதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறியுள்ளார்.

நாங்கள் மனிதநேயத்தில் பலவீனமாக இருக்க மாட்டோம். ஆனால் எங்கள் எல்லைகளுக்கு வரும்போது நாங்கள் வலுவாக இருப்போம் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். இலங்கையில் பிரச்சினைகள் இருப்பதையும், ஆட்கடத்தல்காரர்களால் தவறான செய்திகள் வழங்கப்படுகின்றன என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் படகில் வரும் அகதிகளை அனுமதிக்க மாட்டோம் என்ற எங்கள் செய்தி மிகவும் தெளிவாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் அவுஸ்திரேலியா இலங்கைக்கு எவ்வாறு உதவ முடியும்?

அத்துடன் ஆட்கடத்தலை இரு நாடுகளும் இணைந்து எவ்வாறு எதிர்கொள்வது? என்பது குறித்து இலங்கை பயணத்தில் அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிளேர் ஓ நீல் ஆராயவுள்ளார். இதேவேளை, அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் திருமதி கிளேர் ஓ நீல் இலங்கை விஜயம் செய்துள்ள தருணத்தில் அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Spread the love