இலங்கையின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை பொறுப்புடன் கூறுவதாக பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

நாரஹென்பிட்டி – கிரிமண்டல மாவத்தையில் விமானப் படையினருக்கான புதிய வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் நேற்று (27/01) பாதுகாப்பு செயலாளர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட போதே அவர் இதனை கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், தேசிய பாதுகாப்பு என்பதனை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எளிதாக எடுத்துக் கொண்டதில்லை. பயங்கரவாதப் பிரச்சினைகள், வெளிநாட்டு சக்திகளினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள், கொவிட் பெருந்தொற்று நிலைமைகள் உள்ளிட்ட அனைத்துமே தேசியப்பாதுகாப்பின் அடிப்படையிலானவை.

பல்வேறு தரப்பினர் தங்களது அரசியல் அல்லது வேறு நோக்கங்களுக்காக வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு நாம் பதிலளிக்க வேண்டியதில்லை. அவ்வாறு பதிலளிக்க வேண்டிய பொறுப்பும் கிடையாது.

நாம் ஊடகங்களின் முன்னிலையில் வந்து பல்வேறு தகவல்களை வழங்கி மக்களை அச்சம்கொள்ள செய்யப் போவதில்லை. இந்த காலப்பகுதியில் முப்படையினர், பொலிஸார் மற்றம் புலனாய்வு பிரிவினர் உள்ளிட்ட தரப்புக்கள் இணைந்து நீண்ட தூரம் பயணம் செய்துள்ளோம். அந்த விபரங்களை ஊடகங்களில் சொல்ல முடியாது.

எனினும் தேசியப் பாதுகாப்பிற்கு எந்தவிதமான குந்தகமும் ஏற்படப்போவதில்லை என்பதனை பொறுப்புடன் கூற முடியும் என பாதுகாப்புச்செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love