இந்திய – சீன வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

தெற்காசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ,  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சென்று பின் நேற்றுமுன்தினம் (24) டெல்லி வந்தடைந்தார்.

முதலில்  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த அவர், உக்ரைன் விவகாரம், லடாக்கில் இரு நாடுகளின் படை குறைப்பு உள்ளிட்டவை குறித்த விடயங்களில் ஆலோசித்தார். இதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் வாங் யீ நேரில் சந்தித்தார். 2020-ம் ஆண்டு லடாக்கில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் படைகளைக்குவித்தன.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் படைகள் ஓரளவு குறைக்கப்பட்டாலும் முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை. இந்த மோதலுக்கு பிறகு இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் நேரில் சந்திப்பது இதுவே முதல் முறை ஆகும். இரு நாடுகளுக்கும் இடையே பல மாதங்களாக நிலவி வரும் முறுகல் நிலைப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தையகளைத் தீவிரப்படுத்துவதற்காகவும், இந்த ஆண்டு இறுதியில் பீஜிங்கில் நடத்தப்படும் பிரிக்ஸ் மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைப்பதற்காகவும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இந்த திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனினும், இரு நாட்டு தரப்பில் இருந்தும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்தியா வருவதற்கு முன்னதாக பாகிஸ்தான் சென்றிருந்த வாங் யீ, அங்கு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும்போது காஷ்மீர் குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஜம்மு காஷ்மீர் தொடர்பான விவகாரங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களேயொழிய, சீனா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு அது பற்றி  கருத்து தெரிவிக்க எந்த  உரிமையும்  இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு வாங் யீ இன்று மாலை நேபாளம் செல்ல உள்ளார், என்பது தகவலாகவுள்ளது.

Spread the love