இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர் கப்பல்

விமானம் தாங்கிய INS Vikrant போர் கப்பலை நாட்டிற்கு  அர்ப்பணிக்கும் நிகழ்வு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (02) இடம்பெற்றது. 

விக்ராந்த் போர்க்கப்பல் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதுடன், 2006 ஆம் ஆண்டு  முதல் கப்பலின் நிர்மாணப் பணிகள்  இடம்பெற்று வந்தன. 

இந்திய கடற்படையின் நான்காவது விமானம் தாங்கி போர்க்கப்பலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பலுமான விக்ராந்த் போர்க்கப்பல் 7500 கடல் மைல் வரை தொடர்ச்சியாக ஒரே சமயத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.

20 ஆயிரம் கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கப்பலில்  100-க்கும் மேற்பட்ட இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தயாரிப்புகள் உள்வாங்கப்பட்டுள்ளன. 

இந்திய பிரதமர்  தலைமையில்  கேரளாவின் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில்  இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்  சிங் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். 

இதன்போது, இந்திய கடற்படைக்கான புதிய கொடியும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.  முன்னர் இருந்த கொடியில்  பிரிட்டிஷ் சின்னம் இருந்த  நிலையில், தற்போது மராட்டிய  மன்னர் சத்ரபதி  சிவாஜியின் கடற்படையை நினைவூட்டும்  வகையில் கொடி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்புத்துறையில் இந்தியா தற்சார்புடைய நாடாக மாறுவதற்கான முயற்சிகளுக்கு இது முக்கிய நாள்  என்று பிரதமர் நரேந்திர மோடி  தனது உரையின் போது தெரிவித்துள்ளார். 

Spread the love