மோசமடையும் உக்ரைன் ரஷ்யா போர்! – 847 பொதுமக்கள் பலி

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நீடித்துள்ள நிலையில், பெப்ரவரி 24 முதல் மார்ச் 18 வரை உக்ரைனில் 64 குழந்தைகள் உட்பட குறைந்தது 847 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐநா மனித உரிமைகள் அலுவலகம் (UNHCR) தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட முந்தைய நாளாந்த தகவல்களுடன் ஒப்பிடும்போது 31 உயிரிழப்புகள் அதிகமாகியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

78 குழந்தைகள் உட்பட மேலும் 1,399 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர், பெரும்பாலும் இவை ஷெல் மற்றும் வான்வழித்தாக்குதல்களாலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அலுவலகம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும், உண்மையான எண்ணிக்கை என்பது மிக அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. “பெரும்பாலான பொதுமக்கள் உயிரிழப்புகள், பீரங்கி தாக்குதல், ஏவுகணை தாக்குதல் விமானத்தாக்குதல்கள் உட்பட வெடிக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தியதால் ஏற்பட்டவை” என்று மனித உரிமைகள் அலுவலகம் கூறியுள்ளது. வழமை போன்று எல்லாப்போரின் முடிவினிலேயே இழப்புக்களின் உண்மை நிலையும் தெரியவரும் என்பது உண்மை.

இதனிடையே, ரஷ்யா படையெடுப்பு காரணமாக உக்ரைனில் இருந்து இதுவரை 3.3 மில்லியன் மக்கள் அகதிகளாக அயல் நாடுகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சுமார் 6.5 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே வேறு இடங்களுக்கு சென்றிருக்கலாம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதனிடையே, தெற்கு உக்ரைனில் இராணுவ முகாம்கள் மீது ரஷ்ய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பல வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love