இணையவழி முறையில் கடவுச்சீட்டு வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல்!

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஹோமாகம பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.

கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தப் புதிய வேலைத்திட்டத்தின் கீழ், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டை பொதிகள் சேவைமூலம் தமது வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள முடியும் எவ்வாறாயினும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒரு நாள் கடவுச்சீட்டு சேவை வழமை போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு செல்வோரிடம் நிதி மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பிலான தகவல்களை ஹிரு சி.ஐ.ஏ அண்மையில் வெளிக் கொணர்ந்தது. இதனையடுத்தே, வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்கான குறித்த இலகு வழி வேலைத்திட்டத்திற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது.

Spread the love