ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்சிப் இறுதிப் போட்டி- சிங்கப்பூரை வீழ்த்தி மகுடம் சூடியது இலங்கை

13ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், முன்னாள் சம்பியன் சிங்கப்பூரை கடும் போட்டியின் மத்தியில் 63 – 52 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய நடப்பு சம்பியன் இலங்கை, சம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டது. சிங்கப்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் வரலாற்றில் இலங்கை 6 ஆவது தடவையாக சம்பியனானது.

இப் போட்டியின் முதலாவது கால் மணி நேர பகுதியில் சிங்கப்பூர் 19-13 என்ற புள்ளிகளுடன் முன்னிலை பெற்றது. இரண்டாவது கால் மணி நேர பகுதியில் இலங்கை 14 – 11 என்ற புள்ளிகளுடன் முன்னிலை பெற்ற போதிலும் இடைவேளையின் போது சிங்கப்பூர் 30 – 27 கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது. இடைவேளைக்குப் பின்னர் 3ஆவது கால் மணி நேர பகுதியில் இலங்கை 19 – 08 என்ற புள்ளிகளுடன் 46 – 38 என முன்னிலை பெற்றது. இந்த நிலையில் கடைசி கால் மணி நேர பகுதியில் இலங்கை 17-14 என்ற புள்ளிகளுடன் ஒட்டு மொத்தமாக 63 – 52 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது. இப் போட்டியில், 43 வயதான தர்ஜினி சிவலிங்கம் அதிகளவான புள்ளிகளைப் பெற்று இலங்கை அணி சம்பியனாவதை உறுதி செய்தார்.

Spread the love