ஆசியாவிலேயே வேகமாக அதிகரிக்கும் இலங்கையின் பணவீக்கம்

இந்த மாதம், பில்லியன் டொலருக்கு நிகரான நிவாரணத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகம் அறிவித்தது.

வீழ்ச்சியடைந்த பெரும்போக அறுவடைகள், குறைந்து வரும் அந்நிய செலாவணி இருப்புக்களை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் உலகெங்கும் அதிகரித்த மூலப்பொருட்களின் விலைகளால் தூண்டப்பட்ட உள்ளூர் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் ஆசியாவிலேயே அதிக பணவீக்கத்தினைக் கொண்ட நாடான பாகிஸ்தானையும் கடந்து இலங்கையின் பணவீக்க விகிதம் அதிகரித்து வருகிறது.

புளும்பேர்க் (Bloomberg) நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவில், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 13.2% ஆக அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்ட நுகர்வோர் விலைச் சுட்டெண் 14.2 விதமாக மாக அதிகரித்துள்ளது. ஆண்டுப் பணவீக்கம் சராசரியாக 6.9 வீதத்தால் அதிகரித்துள்ளது.

வேகமாக அதிகரித்த நுகர்வுப் பொருட்களின் விலைகள், இந்த மாதம் நடைபெற்ற மூன்று கூட்டங்களில் முதல் முறையாக அதன் வட்டி விகிதத்தை உயர்த்த, மத்திய வங்கியை நிர்ப்பந்தித்தது. கடந்த மார்கழி மாதத்தில், நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு ஏறக்குறைய 3.1 பில்லியன் டொலர்களாக இருக்க, வெளிநாட்டுக்கு கடனோ 7 பில்லியன் டொலர்களாக இருந்தது.

உணவு மற்றும் மருந்துகளின் அதிகரித்த விலை உயர்வு காரணமாக ஏற்பட்ட மக்களின் கோபத்தைத் தணிக்கும் முயற்சியாக, நட்டமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு, அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வு போன்ற ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான நிவாரணத் திட்டத்தை சனாதிபதி கொட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அறிவித்தது.

மக்களின் முக்கிய நுகர்வுப் பொருளான அரிசியின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் முகமாக, இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கையின் மிகப்பெரிய கடன் வழங்குனரான சீனாவிடமிருந்து கடன் மறுசீரமைப்பை அரசாங்கம் நாடியுள்ளதுடன் இந்தியாவிடமிருந்து கடனைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love