ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கையில் நடத்த தொடர்ந்தும் முயற்சி

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கையில் நடத்துவதற்கு அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பொதுச்செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி வேறொரு நாட்டில் நடத்தப்படும் என கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டார். இருப்பினும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பான இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை என்றார் அவர். இன்னும் சில தினங்களில் அவுஸ்திரேலியாவின் மூவகை கிரிக்கெட் அணிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளன. 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர், 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆகியவற்றில் இலங்கையை அவுஸ்திரேலியா எதிர்த்தாடவுள்ளது. இந்த மூன்று தொடர்களையும் நாங்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்தால் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்துவதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது என நம்புவதாக மொஹான் டி சில்வா தெரிவித்தார்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் தகுதிகாண் நாடு ஒன்றுமாக 6 நாடுகள் பங்குபற்றும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதியிலிருந்து செப்ரெம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அதற்கு முன்பதாக தகுதிகாண் சுற்று ஆகஸ்ட் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அவுஸ்திரேலியாவில் இந்த வருட இறுதியில் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவிருப்பதால் இம் முறை ஆசிய கிண்ண கிரிக்கெட் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியாக நடத்தப்படவுள்ளது.

Spread the love