அஸ்வெசும நிவாரண திட்டத்தின் மூலம் அதிபரும் அரசாங்கம் மக்களை ஏமாற்றுவதாக சஜித் குற்றச்சாட்டு

இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நிவாரண திட்டத்தின் மூலம் சிறிலங்கா அதிபரும் அவரது அரசாங்கமும் மக்களை ஏமாற்றுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த திட்டம் தொடர்பில் பல தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்துள்ள பின்னணியில், சஜித் பிரேமதாஸ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் 7 மில்லியன் மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 1.2 மில்லியன் மக்களை மாத்திரம் சிறிலங்கா அரசாங்கம் அஸ்வெசும நிவாரண திட்டத்தின் கீழ் பெயரிட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சிறிலங்கா அரசாங்கம் எதனை எதிர்பார்க்கிறது என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இந்த நிவாரண திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் எந்த பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்டார்கள் என்பது தொடர்பான விடங்களையும் சிறிலங்கா அரசாங்கம் வெளியிட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவின் முன்னாள் அதிபர்களான ராஜபக்சக்கள் நாட்டை வறுமை நிலைக்கு தள்ளியதை தொடர்ந்து, தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் அதனையே செய்வதாக சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கையின் வறுமை வீதம் 14 லிருந்து 31 ஆக தற்போது அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அஸ்வெசும எனும் நிவாரண திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இலங்கையின் வறுமை நிலையால் பாதிக்கப்பட்டுள்ள 7 மில்லியன் மக்களும் குறித்த திட்டத்தின் கீழ் பெயரிடப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை சிறிலங்கா அரசாங்கம் தமது தனிப்பட்ட குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மேற்கொண்டதாகவும் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

Spread the love