அத்தியாவசிய சேவைக்கான நிதியை பெற குறைநிரப்பு பிரேரணை

695 பில்லியன் ரூபா நிதியை பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ள குறைநிரப்பு பிரேரணை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்தின் வரவு செலவுத் திட்ட சலுகை சேவைகள் மற்றும் திடீர் தேவைகளின் பொறுப்பு கருத்திட்டத்தின் கீழ், குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பிப்பதற்காக பிரதமரினால் அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது.

நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ள அழுத்தங்களை குறைக்கும் நோக்கில் இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி பயனாளிகள், பெருந்தோட்ட மக்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அரசாங்கத்தினால் நிவாரணப் பொதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கான செலவுகளை மேற்கொள்வதற்கும் அத்தியாவசிய அரச சேவைகளை தடைகளின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கும் தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Spread the love