Jaffna kingsஐ வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது காலி

குசல் மெண்டீஸ் மற்றும் தனுஷ் குணதிலக்க ஆகியோருக்கு இடையிலான 121 ஓட்ட இணைப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் நுவான் துசாரவின் 5 விக்கெட்டுகள் காரணமாக ஜப்னா கிங்ஸுக்கு எதிரான போட்டியில் 64 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற காலி கிளடியேட்டர்ஸ் அணி நேரடியாக லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது.


2021 லங்கா பிரீமியர் லீக் ரி-20 கிரிக்கெட் தொடரின் பிளே – ஆஃப் சுற்றின் இரண்டாவது ஆட்டம் நேற்று முன்தினம் அம்பாந்தோட்டை, சூரியவவெளி மைதானத்தில் திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் மற்றும் பானுக ராஜபக்ஷ தலைமையிலான காலி கிளடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஜப்னா கிங்ஸ், முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை காலிக்கு வழங்கியது. காலி கிளடியேட்டர்ஸ் சார்பில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய குசல் மெண்டீஸ் மற்றும் தனுஷ் குணதிலக்க அணிக்காக நல்ல தொடக்கத்தை பெற்றுக்கொடுத்தனர்.


முதல் பவர் பிளேயான 6 ஓவர்களின் நிறைவில் அவர்களின் அதிரடியால் 61 ஒட்டங்கள் பெறப்பட்டது. அதோடு நிற்காமல் 11 ஆவது ஓவரின் நிறைவில் முதல் விக்கெட் இணைப்பாட்டம் 100 ஓட்டங்களை கடந்தது. பின்னர் இருவரும் மொத்தமாக 78 பந்துகளில் 121 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டனர். தொடக்க ஆட்டக்காரர்கள் ஒருவரான குணதிலக்க முதலில் 50 ஓட்டங்களை கடந்தார். மறுபக்கம் குசல் மெண்டீஸ் மொத்தமாக 33 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் பெற்றார். இந் நிலையில் 13.2 ஓவரில் திசர பெரேராவின் பந்து வீச்சில் குணதிலக்க மொத்தமாக 42 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்களை குவித்தது காலி அணி. 120 பந்துகளுக்கு 189 ஓட்டம் தேவை என்ற நோக்கில் கடினமாக இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஜப்னா அணி நுவான் துசாரவின் பந்துப் பரிமாற்றங்களுக்கு முகங்கொடுக்க திணறிய காரணத்தினால் அணியின் முன்னணி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்தனர். இறுதியாக 16.5 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்ட அவர்கள் 124 ஓட்டங்களையும் பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 64 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவிக் கொண்டனர்.


ஜப்னா அணிக்கு பலமான துடுப்பாட்ட வரிசை இருந்தபோதிலும், ரமானுல்லா குர்பாஸ் மற்றும் 7ஆம் இலக்க துடுப்பாட்ட வீரர் வனிந்து ஹசரங்க ஆகியோரைத் தவிர ஒரு துடுப்பாட்ட வீரரும் 10 ஓட்டங்களை எட்டுவதற்கு காலி கிளடியேட்டர்ஸ் பந்துவீச்சாளர்கள் அனுமதிக்கவில்லை . பந்து வீச்சில் துசார மொத்மாக 3.5 ஓவர்களுக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 13 ஓட்டங்களை வழங்கி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அவர் தவிர புலின தரங்கா, மெஹமட் அமீர் மற்றும் மொஹமட் ஹப்பீஸ் ஆகியோரும் தமது பங்கிற்கு ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் காலி அணி நடப்பு லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைந்துள்ளது.

Spread the love