22 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டி நிறைவு

பர்மிங்காம் நகரில் நடை பெற்றுவந்த 22ஆவது பொதுநலவாய விளையாட்டுத் தொடர், நிறைவடைந்துள்ளது. பொதுநலவாய விளையாட்டுத் தொடரின் நிறைவு விழா பர்மிங்காமில் உள்ள அலெக்சாண்டர் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில், பொது நலவாய விளையாட்டுத் தொடர் நிறைவடைந்ததை இளவரசர் எட்வர்ட் முறைப்படி அறிவித்தார். அடுத்த பொதுநலவாய விளையாட்டுத் தொடர் அவுஸ்ரேலியாவின் விக்டோரியா நகரில் 2026 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இதனை அடுத்து பொதுநலவாய விளையாட்டுக் கொடி விக்டோரியா ஆளுநரிடம் வழங்கப்பட்டது.

பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வகையில் பல்வேறு இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கண்கவர் வாண வேடிக்கை நிகழ்ச்சிகளுடன் பொதுநலவாய விளையாட்டுத் தொடர் நிறைவுக்கு வந்தது. 72 நாடுகள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட விளையாட்டுத் தொடரில், 1000 இற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த தொடரின் முடிவில் அவுஸ்ரேலியா 67 தங்கப் பதக்கங்கள், 57 வெள்ளிபதக்கங்கள், 54 வெண்கல பதக்கங்களுடன் ஒட்டுமொத்தமாக 178 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. இதனைத்தொடர்ந்து, விளையாட்டுத்தொடரை நடத்திய இங்கிலாந்து 57 தங்கபதக்கங்கள், 66 வெள்ளிபதக்கங்கள், 53 வெண்கல பதக்கங்களுடன் ஒட்டுமொத்தமாக 176 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்தது. கனடா 26 தங்கப் பதக்கங்கள், 32 வெள்ளிப் பதக்கங்கள், 34 வெண்கலப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்தமாக 92 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்தது. இலங்கை, ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கல பதக்கங்கள் என ஒட்டுமொத்தமாக நான்கு பதக்கங்களை வென்றது.

Spread the love