21 ஆவது திருத்தத்தையடுத்து நிதியமைச்சர் பதவியை இழக்கவுள்ள ரணில்

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் சபாநாயகர் கையெழுத்திட்ட பின்னர் அது நடைமுறைக்கு வந்ததும் நிதி அமைச்சுப் பதவியை ஜனாதிபதியினால் வகிக்க முடியாத நிலைமை ஏற்படவுள்ளது. புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய பாதுகாப்பு அமைச்சு தவிர்ந்த வேறு அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி வகிக்க முடியாது.

இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக நிதி அமைச்சுப் பதவியை வகிக்கின்றார். இவ்வாறான நிலைமையில் சபாநாயகர், நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் ஜனாதிபதியினால் நிதி அமைச்சுப் பதவியை வகிக்க முடியாது. எனினும் அரசியலமைப்பு திருத்தத்தில் 44 (3) சரத்துக்கு அமைய ஏதேனும் விடயத்திற்கு அமைச்சர் நியமிக்கப்படாவிட்டால் 14 நாட்களுக்கு மாத்திரம் ஜனாதிபதியினால் அந்த விடய பொறுப்பை வகிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமைக்கு மத்தியிலேயே எதிர்வரும் 14 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினாலேயே நிதி அமைச்சராக வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் சபாநாயகர் கையெழுத்திடுவது தாமதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Spread the love