வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு மீண்டும் மோசமான நிலையில்! – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை உள்ளிட்ட அனைத்து வைத்தியசாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அனைத்து வகையான மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக, வைத்தியசாலைகளின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஶ்ரீ சந்திரகுப்தவிடம் வினவியபோது, குறிப்பிட்ட சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், வைத்தியசாலை செயற்பாடுகளில் எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவித்தார். 

தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மருந்துகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  இதனிடையே, மகரகம அபேக்‌ஷா வைத்தியசாலையில் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் 15 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான மருந்துகள் நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கப் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஏனைய மருந்துகள் உள்ளூர் விநியோகத்தர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படுவதாக வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love