விஜயம் மேற்கொள்ளவிருக்கும் பான் கீ மூன்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். உலக பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவராகவுள்ள பான் கீ மூன், எதிர்வரும் 06 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பிற்கிணங்க நாட்டிற்கு வருகை தரும் பான் கீ மூன், பல்வேறு உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடவுள்ளார். இலங்கையின் நிலையான அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய உடன்படிக்கைகள் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன.

பான் கீ மூன் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளும் காலப்பகுதியில், வௌிவிவகார அமைச்சு மற்றும் உலக பசுமை வளர்ச்சி நிறுவனம் ஆகியன உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதுடன், இரு தரப்பு பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தனவை மேற்கோள்காட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள “காலநிலை மாற்ற பல்கலைக்கழகம்” தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கலந்துகொள்வாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

Spread the love