வடபகுதி மீனவர்கள் கொழும்பில் போராட்டம்

உள்ளூர் இழுவை மடிபடகுகளை தடைசெய்ய வேண்டாம் என வலியுறுத்தி கொழும்பில் வடபகுதி மீனவர்களால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூர் இழுவைமடி படகுகளை கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் வடபகுதி மீனவர்களினால் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. உள்ளூர் இழுவைமடி படகுகள் தடை செய்யப்படுமாக இருந்தால், அதனை நம்பியுள்ள மீனவக்குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.


அண்மைக் காலமாக இலங்கை கடற்பரப்பிற்குள் அத்து மீறிநுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வடபகுதி மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மீனவர்களின் இழுவைமடி படகுகள் காரணமாக தங்களது கடல் வளம் சூறையாடப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். அதேபோன்று உள்ளூர் இழுவைமடி படகுகளையும் தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோஷமும் வடக்கின் சில பகுதிகளில் உள்ள மீனவர் சங்கங்களினால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே உள்ளூர் இழுவைமடி படகுகளை தடை செய்ய வேண்டாம் என வலியுறுத்தி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

Spread the love