வடக்கிற்கு விஜயம் செய்யும் அரச தரப்பினர்

கால்நடை வளங்கள் இராஜாங்க அமைச்சர் D.B.ஹேரத் வட மாகாணத்திற்கு நேற்று விஜயம் செய்துள்ளார். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர், கிளிநொச்சி, முல்லைத்தீவு கால்நடை வைத்தியர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் அவருடனான கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால், முட்டை சார்ந்து கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் D.B. ஹேரத் கலந்துரையாடினார். இதனிடையே, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்விலும் அவர் கலந்துகொண்டிருந்தார்.

இதேவேளை, தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வட மாகாணத்திற்கான இரண்டு நாட்கள் விஜயமொன்றை இன்று (19) மேற்கொள்ளவுள்ளார். யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களுக்கு விஜயம் செய்யும் தொழில் அமைச்சர், அங்குள்ள தொழிலாளர்களின் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் நோக்கிலான கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார். ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும யாழ்ப்பாணத்திற்கு நேற்று (18) விஜயம் மேற்கொண்டிருந்தார்.

யாழ். மாவட்ட ஊடகவியலாளர்களை யாழ். மாவட்ட செயலகத்தில் சந்தித்த ஊடகத்துறை அமைச்சர், அவர்களது தேவைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன், பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்கினார். இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் உள்ளிட்ட 75 உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர். யாழ். வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைத் தலைவரின் அழைப்பிற்கிணங்க இந்த விஜயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபைக்கு வருகை தந்திருந்த கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் யாழ். மாநகர சபையின் பிரதி மேயர் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது, நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன. பின்னர் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள், யாழ். பொது நூலகத்தினை பார்வையிட்டனர். இதனையடுத்து, வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு சென்ற கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர்கள் அங்கும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

source from newsfirst
Spread the love