வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும்

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை படிப்படியாக நாளை புயலாக உருவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இது வடக்கு-வடகிழக்கு திசையில் வங்கதேசம் மற்றும் மியான்மர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக கிழக்கு மாகாண கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் எனவும், அது மணிக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடற்பரப்புகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை மற்றும் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மீனவ மற்றும் கடற்படை சமூகங்களுக்கு மறு அறிவித்தல் வரை இலங்கையின் கிழக்கு கடற்பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கைக்கு கிழக்கே கடற்பரப்பில் உள்ளவர்கள் உடனடியாக கரையோரங்களுக்கு திரும்புமாறு அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Spread the love