ரணில், மகிந்தவுடன் சொல்ஹெய்ம் சந்திப்பு

நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக்சொல் ஹெய்மை தனது சர்வதேச காலநிலை ஆலோசகராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ள அதேநேரம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுக்களையும் நடத்தியுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எரிக்சொல் ஹெய்ம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இது குறித்து எரிக் சொல்ஹெய்ம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சிறந்த சந்திப்பை முன்னெடுத்தோம். பசுமைப் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் இலங்கையின் காலநிலைத் தலைமைத்துவத்திற்கான சிறந்த தொலைநோக்குடையவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அவது சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டதில் பெருமிதம் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை எரிக் சொல்ஹெய்ம், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இலங்கைக்கான விசேட விஜயத்தின் போது எரிக்சொல் ஹெய்ம் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலநிலை ஆலோசகராக எரிக்சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு மகிந்த ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். எரிக் சொல்ஹெய்முடனான பேச்சுவார்த்தைகளின்போது இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழவிடுதலைப்புலிகளிற்கும் இடையிலான மோதல் காலத்தில் சமாதான பேச்சுவார்த்தைகளிற்கு எரிக் சொல்ஹெய்ம் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்த மகிந்த ராஜபக்ச, உள்நாட்டு மோதல் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும் பேசியுள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து எரிக்சொல்ஹெய்முடன் ஆராய்ந்துள்ள மகிந்த ராஜபக்ச, நோர்வேயின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

Spread the love