ரஞ்சன் இன்று விடுதலை! நீதிமன்றில் மன்னிப்பு கோரினார்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, பொதுமன்னிப்பில் இன்றைய தினம் அல்லது எதிர்வரும் திங்கட்கிழமை விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், எனது நட்புக்குரிய அரசியல் நண்பன் ரஞ்சன் 26 அல்லது 29 ஆம் திகதி விடுதலையாவார் என்று நான் மிகவும் நம்புகின்றேன். எனதும் மற்றும் மனுஷ நாணயக்காரவும் மேற் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிய ஜனாதிபதிக்கும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான குற்றச்சாட்டில் 2021 ஜனவரி 12 ஆம் திகதி முதல் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கடந்த காலங்களில் கோரிக்கைகளை விடுத்து வந்த நிலையில், பொதுமன்னிப்பில் விடுதலை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடந்த வாரத்தில் ஜனாதிபதி, நீதி அமைச்சருக்கு அறிவித்திருந்தார்.

இதன்படி ரஞ்சன் ராமநாயக்க இன்று அல்லது எதிர்வரும் திங்கட்கிழமை விடுதலையாவார் என்று ஹரின் பெர்ணான்டோ தகவல் வெளியிட்டுள்ளார். இதேவேளை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சத்தியக் கடதாசி மூலம் நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கோரியுள்ளார். நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட சம்பவம் தொடர்பான முதலாவது மற்றும் இரண்டாவது வழக்குடன் தொடர்புடைய தனக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்தே அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.

2017 ஆகஸ்ட் 21 ஆம் திகதி அலரிமாளிகைக்கு வெளியே முன்வைத்த கருத்தொன்று தொடர்பில் முதலாது வழக்கில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி ஆவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதேவேளை முதலாது வழக்குடன் தொடர்புடைய குறித்த கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறியமை தொடர்பில் இரண்டாவது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் நீதிமன்றத்திற்கு சத்தியக் கடதாசி மூலம் அறிவித்துள்ள ரஞ்சன் ராமநாயக்க, தனது கருத்து தவறானது என்றும், இதனால் பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதித்துறையில் அனைவருக்கும் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு மன்னிப்பு கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த கருத்துக்களை தான் வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், இனிமேலும் அவ்வாறான கருத்துக்களை வெளியிடமாட்டேன் என்றும் ரஞ்சன் ராமநாயக்க அந்த சத்தியக் கடதாசியில் தெரிவித்துள்ளார்

Spread the love