யோகி ஆதித்யநாத்தின் பிரம்மாண்ட பதவியேற்பு: கோலாகலமாக தயாராகிறது உத்திரபிரதேஷ்

உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்கவுள்ள யோகி ஆதித்யநாத்தின் பிரமாண்டமான பதவியேற்பு விழாவை மார்ச் 25ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு நடத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது என அதனது வட்டாரங்களிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

லக்னோவில் உள்ள ஏகானா அரங்கத்தில் யோகி ஆதித்யநாத்தின் பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாகவும், விழாவிற்கான விருந்தினர் பட்டியலில் பல ஆயிரம் பேர் உள்ளதாகவும் ஐ ஏ என் எஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

அறிக்கையின்படி, நிகழ்விற்கான விருந்தினர்களின் பட்டியலை பா.ஜ.க தயாரித்து வருகிறது. மேலும் விருந்தினர்களில், பல்வேறு அரசாங்க திட்டங்களின் பயனாளிகளும் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. இவர்கள் “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதில் முக்கிய பங்கு வகித்தவர்கள்” என்பது குறிப்பிடத்தக்கது.

பதவி ஏற்பு விழா நடைபெறவுள்ள அரங்கத்தில், சுமார் 200 மிக முக்கிய பிரமுகர்கள் பங்கு பற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா மற்றும் பலர், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் சில முக்கியப் பிரமுகர்கள் உட்பட பல மிக முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் அதிகாரிகள் ஐ ஏ என் எஸ்ஸிடம், விழா ‘நிகரற்ற ஒரு விழாவாக’ இருக்கும் என்று கூறினார். உத்தரப்பிரதேசத்தில் 403 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் 255 இடங்களை கைப்பற்றி பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Spread the love