தற்போது நாடு பல்வேறு துண்டுகளாக பிரிக்கப்பட்டு நாட்டின் வளங்கள் அமெரிக்கா, சீனா, இந்தியா என மூன்று நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவற்றுக்கிடையே ஏற்பட்டுள்ள போட்டா போட்டியால் இந்த மூன்று நாடுகளும் இலங்கையில் மோதும் போது இலங்கை மக்கள் மரணிக்கும் ஆபத்தான நிலை வரலாம் என இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் இரண்டு காற்றாலை மின் திட்டங்களை நிறுவுவதற்கு அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இரண்டு காற்றாலை மின் திட்டங்களை நிறுவ அனுமதிப்பதன் மூலம் நாட்டின் பல துறைகள் பாதிக்கப்படும் என இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
அதானி கிரீன் – எனர்ஜி நிறுவனத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடு செய்ய தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால், இது தொடர்பான இரண்டு திட்டங்களை நிறுவனத்திற்கு வழங்குவதில் தமக்கு உடன்பாடில்லை என தெரிவித்துள்ளார்.