முடிவுக்கு வராத மீனவ பிரச்சனை – முறுகல் நிலை ஏற்பட்டு, அமைச்சர் வெளியேற்றம் (காணொளி இணைப்பு )

இலங்கை கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுத்து, தமது வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் மீனவர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். வத்திராயன் கடற்பரப்பில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்தமை இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டம் மூன்றாவது நாளாகவும் வலுவடைந்தது.

Sea Of Sri Lanka எனப்படும் இலங்கையின் கடல் வளம் இந்திய மீனவர்களால் சூறையாடப்படுவதை கண்டித்தும் இலங்கை மீனவர்கள் தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ். மாவட்ட மீனவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். யாழ். மாவட்ட செயலகத்தை இன்று காலை முற்றுகையிட்டும் வட மாகாண ஆளுநர் அலுவலகம் உள்ளிட்ட அரச அலுவலகங்களுக்கு செல்கின்ற வீதிகளை மறித்தும் மீனவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அரச அலுவலகங்களுக்கு செல்வதற்காக வருகை தந்திருந்த அதிகாரிகளும் இந்த போராட்டம் காரணமாக நீண்டநேரம் வீதியில் காத்திருக்க நேரிட்டது. A9 வீதியூடான வாகன போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டது.

யாழ். மாவட்டத்திலுள்ள 50-இற்கும் ​மேற்பட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளும் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். போராட்டம் இடம்பெற்ற காலப்பகுதியில் யாழ். மாவட்ட செயலகத்தின் செயற்பாடுகள் முற்றாக தடைப்பட்டதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கூறினார். மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் உள்ளிட்டோரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதனிடையே, நேற்று நண்பகல் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுடன் கலைந்துரையாடினார். இதன்போது, தமக்கு ஆக்கப்பூர்வமான எழுத்து மூல தீர்வு வேண்டும் என மீனவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தனர். எழுத்து மூல ஆவணம் வழங்க முடியாது, எனினும் வாய்மூலம் வாக்குறுதி வழங்குவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார். இதனால் மீனவர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு, அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டார்.

source from news first
Spread the love