மிக அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்தும் ஜுலை 10 வரை முடங்கும்

நாட்டில் மிக அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் ஜூலை 10 வரை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடி உச்சம் பெற்றுள்ள நிலையில் நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, துறைமுகம், சுகாதாரம், அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகம் உள்ளிட்ட சில துறைகளுக்கு மாத்திரம் குறித்த காலப்பகுதியில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விநியோகிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன நேற்றிரவு தெரிவித்தார்.

ஏனைய அனைத்து துறையினரும் வீடுகளில் இருந்து பணியாற்றுவதன் மூலம் இந்த எரிபொருள் நெருக்கடியை தீர்க்க ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கோரியுள்ளார்.  நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் நேற்று மாலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் இதற்கமைய அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்க இதன்போது தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சரவை பேச்சாளரும், போக்குவரத்து அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வசம் மிகக் குறைந்தளவு எரிபொருளே உள்ளது.

அவற்றை அனைத்து தரப்பினருக்கும் பங்கீடு செய்வதில் சிக்கல் நிலை ஏற்படும். ஆகவே, எதிர்வரும் 10 ஆம் திகதிவரை அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு ஏனைய செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதற்காக ஏனைய துறையினரின் ஒத்துழைப்பையும் எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, எரிபொருள் நெருக்கடி உச்சமடைந்துள்ளமை அடுத்து கொழும்பு வலயத்திலும் மேல் மாகாணத்தின் புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மற்றைய மாகாணங்களின் முக்கிய நகரங்களை அண்மித்ததாக அமைந்துள்ள பாடசாலைகளும் ஜூலை 10 வரை மூடப்படும் எனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஏனைய, பாடசாலைகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான அதிகாரம் பாடசாலைகளின் அதிபர்களுக்கும், மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 10 ஆம் திகதியின் பின்னர் முறையாக எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகிக்கப்பதற்கான முறையான திட்டமொன்றை வகுத்து செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் என்ற வகையில் இந்த நெருக்கடி நிலைமை தொடர்பில் மிகவும் வருந்துவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்போதைய எரிபொருள் கையிருப்பை கருத்திற்கொண்டு, எதிர்வரும் காலங்களில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தையும் மட்டுப்படுத்த வேண்டிய நிலைமையும் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Spread the love