மருந்துகள் இல்லை 50 பேர் மரணம் -மறுக்கிறார் புதிய சுகாதார அமைச்சர்

நாட்டில் மருந்து தட்டுப்பாடு காரணமாக இதுவரை 50இற்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் நாட்டில் மருந்து தட்டுப்பாடு காரணமாக எந்த ஒரு நபரும் இதுவரை மரணிக்கவில்லை என புதிய சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை முன்வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் கூறுகையில், நாட்டில் மருந்து தட்டுப்பாடு நிலவுகின்ற போதும் எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் அந்தத் தட்டுப்பாட்டை நீக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் மூன்று மாதங்களுக்கு குறிப்பிட்ட மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவலாம். எனினும் அந்த தட்டுப்பாட்டை தவிர்த்துக் கொள்வதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து, மருந்து பொருட்களை விரைவாக பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேவேளை பெருமளவு மருந்துகள் உள்ள ஆஸ்பத்திரிகளிலிருந்து மருந்து தட்டுப்பாடுள்ள ஆஸ்பத்திரிகளுக்கு மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை சர்வதேச நாடுகளில் உள்ள தூதரகங்களுடன் தொடர்பு கொண்டு அங்குள்ள இலங்கையர்களின் உதவிகளை பெற்று மருந்து கொள்வனவு நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டினால் இதுவரை 50 இற்கு மேற்பட்டோர் மரணித்துள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். நான் இது தொடர்பில் தற்போது செயலாளரை விசாரித்தேன் நாட்டில் மருந்து தட்டுப்பாடு காரணமாக இதுவரை எந்த ஒரு நபரும் மரணிக்கவில்லை என அவர் உறுதிப்படுத்தியுள்ளார் என்றார்.

Spread the love