பொருளாதார நெருக்கடியால் இலங்கைக்கு உடனடி ஆபத்துஐ.நா. எச்சரிக்கை – 54 வறிய நாடுகளுக்கு அவசர கடன் உதவி தேவை

உலகின் மிக வறிய மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு கடன் நிவாரணம் மிகவும் அவசியத் தேவையாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் உடனடி ஆபத்துள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை, பாகிஸ்தான், டுனிசியா, சாட் மற்றும் சாம்பியா ஆகியவை உள்ளதாக ஐ.நா. அபிவிருத்தித் திட்டம் (U-N-D-P) நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

டசின் கணக்கான வறிய, கடனாளி நாடுகள் கடும் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்கின்றன. பல நாடுகள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தவோ அல்லது புதிய நிதியுதவியை அணுகவோ இயலாத நிலையில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான நாடுகளின் செயலற்ற தன்மையின் அபாயங்கள் பயங்கரமானவை எனவும் ஐ.நா. எச்சரித்துள்ளது. உடனடி நிவாரணம் இல்லாவிட்டால் குறைந்தது 54 நாடுகளில் வறுமையின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். பணவீக்கம், குறைந்த வளர்ச்சி ஆகியவை உலகெங்கிலும் ஏற்றத்தாழ்வைத் தூண்டுவதால் சந்தை நிலைமைகள் வேகமாக மாறி வருகின்றன என்றும் ஐ.நா. வின் அறிக்கை தெரிவித்துள்ளது. கொவிட் -19 தொற்று நோயினால் நீண்ட காலத்திற்கு முன்பே பாதிக்கப்பட்ட பல நாடுகளில் கடன் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஐ நா. கூறியுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நாடுகளில் காலநிலை மாற்றம், இயற்கை சீற்றங்களின் தணிப்பு ஆகியவற்றில் முதலீடுகள் நடக்காது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் உலகில் காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக் கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது எனவும் ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் வொஷிங்டனில் நடைபெறவுள்ள ஜி-20 நிதி அமைச்சர்களின் கூட்டங்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கை, விரைவான நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

பலமுறை எச்சரித்த போதிலும் பெரிய மாற்றங்கள் நடக்கவில்லை . இதனால் அபாயங்கள் அதிகரித்து வருகின்றன என ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (U-N-D-P) தலைவர் அச்சிம் ஸ்டெய்னர் (Achim Steiner) ஜெனீவாவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறினரர் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து, உலகெங்கிலும் உள்ள டசின் கணக்கான நாடுகளில் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஏழை, கடனாளி நாடுகள் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்கின்றன. மேலும் பல நாடுகள் தங்கள்கடனைத் திருப்பிச் செலுத்தவோ அல்லது புதிய நிதியு தவியை அணுகவோ இயலாதுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.  கொவிட் நெருக்கடியின் ஏற்பட்ட சுமையை குறைக்க பல நாடுகள் தங்கள் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. கடன்களை மறுசீரமைப்பதற்கான பாதையைக் கண்டறிவற்கான பேச்சுவார்த்தைகள் நத்தை வேகத்தில் நகர்கின்றன. கிடைக்கக்கூடிய தரவுகளின்படி பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவரும் 54 நாடுகளில் 46 நாடுகள் 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 782 பில்லியன் டொலர் கடன் சுமையைக் கொண்டிருந்தன. அர்ஜென்டினா, உக்ரைன் மற்றும் வெனிசுலா நாடுகள் மட்டும் அந்த தொகையில் மூன்றில் ஒருபங்கிற்கும் அதிகமான கடனைக் கொண்டுள்ளன எனவும் ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் பொருளாதார நெருக்கடியால் உடனடி ஆபத்துள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை , பாகிஸ்தான, துனிசியா, சாட் மற்றும் சாம்பியா ஆகியவை உள்ளதாக ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஜோர்ஜ்கிரே மோலினா (George Gray Molina) செய்தியாளர்களிடம் கூறினார். தேவைப்படும் மறுசீரமைப்புடன் முன்னேறுவதற்கு தனியார் கடனாளிகள் இதுவரை மிகப்பெரிய தடையாக இருப்பதாகவும் கிரே மோலினா தெரிவித்தார்.இதேவேளை, பல நாடுகள் எதிர்கொண்டு வரும் நெருக்கடி குறித்து பலமுறை எச்சரிக்கையை எழுப்பிய ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் தலைவர் அச்சிம் ஸ்டெய்னர், இந்த நெருக்கடியில் இருந்து நாடுகள் மீள்வதற்கான கூட்டுப் பொறுப்பை சர்வதேச சமூகம் இறுதியாக அங்கீகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதை விட பாதிப்பு வராமல் தடுப்பது சிறந்தது. உலகளாவிய மந்தநிலையைச் சமாளிப்பதை விட, மந்த நிலை ஏற்பட முன்னர் பாதுகாப்பது சிறந்தது எனவும் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஜோர்ஜ் கிரே மோலினா ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

Spread the love