பிரித்தானியாவின் காலனித்துவ மனோபாவம்

அகதித் தஞ்சம் கோருபவர்களை கிழக்கு ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் குடியமர்த்தும் பிரித்தானியாவின் திட்டத்துக்கு ஐரோப்பிய மனித உரிமைகள் நீதி மன்றம் தற்காலிகத் தடை விதித்துத் தீர்ப்பளித்திருக்கின்றது.

இதனையடுத்து ஜுன் 14ஆம் திகதி அகதிகளை ஏற்றிக்கொண்டு லண்டனில் இருந்து ருவாண்டா புறப்படவிருந்த விமானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. நாடு கடத்தப்படவிருந்த அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களும், அவர்களுக்கு ஆதரவாகச் செயற்படும் மனித உரிமை அமைப்புக்களும் மேற்கொண்ட இறுதிநேர முயற்சி ஓரளவு வெற்றியளித்துள்ள போதிலும் இது தற்காலிக வெற்றியே என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

ஆரம்பம் முதலே மனித உரிமை அமைப்புகளின் தீவிர கண்டனத்துக்கு உள்ளாகியிருந்த பிரித்தானியாவின் புதிய குடிவரவுக் கொள்கைத் திட்டத்துக்கு அமைய 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் பிரித்தானியாவுக்குள் முறையற்ற விதத்தில் பிரவேசிக்கும் அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்கள் ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். 6,500 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ருவாண்டாவில் அவர்களின் தஞ்சக் கோரிக்கை பரிசீலனைக்கு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டாலும் அது எத்துணை தூரம் நடைமுறைச் சாத்தியமானது என்ற கேள்வி எழுகின்றது.

ஏற்கனவே இது போன்ற ஒரு எடுத்துக்காட்டு அவுஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ளது. படகுகள் மூலம் பயணித்து அவுஸ்திரேலியாவை அடையும் தஞ்சக் கோரிக்கையாளர்களை கிறிஸ்மஸ் தீவுகளில் அடைத்து வைக்கும் நடைமுறையை அந்த நாடு பின்பற்றி வருகின்றது. ஆனால், பிரித்தானியாவோ சம்பந்தம் எதுவும் இல்லாமல் தஞ்சக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பிவைக்க முடிவு செய்துள்ளது.


பிரித்தானிய அரசாங்கத்தைப் பொறுத்தவரை, முறையற்ற விதத்தில் பிரித்தானியாவுக்கு வருகை தரும் அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அபாயகரமான கடற்பயணத்தை மேற்கொண்டு இங்கிலாந்தை அடைகிறார்கள். இந்தப்பயணத்தின் போது அவர்கள் அநியாயமாக தமது உயிர்களை இழக்க வேண்டியேற்படுகின்றது. அது மாத்திரமன்றி, அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களை பிரித்தானியாவுக்கு அழைத்துவரும் சட்டவிரோதக் கும்பல்கள் பெருமளவில் பணமீட்டுகிறார்கள். இவர்களின் செயற்பாட்டைத் தடுக்கவே புதிய குடிவரவுக் கொள்கை எனச் சொல்கின்றது பிரித்தானிய உள்துறை அமைச்சு. பிரித்தானிய அரசாங்கத்தின் விளக்கத்தில் ஓரளவு உண்மை இல்லாமல் இல்லை.


ஆனால், அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்கள் எதற்காக இந்த அபாயகரமான பயணத்தை மேற்கொண்டு பிரித்தானியாவுக்கு வருகின்றார்கள்? இவ்வாறு வருகின்ற ஒரு சிலர் அகதித் தஞ்சம் கிட்டக்கூடிய பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்தும் வருகின்றார்கள் என்றால் அவர்களின் இறுதி இலக்கு பிரித்தானியாவே என்பது புரிகின்றது. அது மாத்திரமன்றி, சொந்த நாட்டில் வாழமுடியாத சூழலில் இருந்து தப்புவதற்காக, உயிரைக் காத்துக் கொள்வதற்காக எத்தகைய அபாயத்தையும் எதிர்கொள்ளத் துணிந்தே அவர்கள் தமது பயணத்தை மேற்கொள்கிறார்கள் எனில் அதில் உள்ள நியாயங்களைச் சீர்தூக்கிப் பார்ப்பதை விடுத்து, வெறுமனே அகதிகள் என்ற ஒற்றை வரையறைக்குள் அனைவரையும் அடைத்துப் பார்ப்பது எத்தகைய அணுகுமுறை என்பது புரியவில்லை, தற்போதைய விவகாரத்தில் முதற்கட்டமாக 8 அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்புவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

இதில் சூடான், சிரியா மற்றும் ஈராக் நாட்டவர்கள் அடங்கியிருந்ததாகத் தெரிகின்றது. தமது நாடு கடத்தல் உத்தரவை எதிர்த்து இவர்கள் பிரித்தானிய நீதிமன்றங்களில் தொடர்ந்த வழக்குகள் வெற்றியைப் பெறவில்லை. இவர்கள் சார்பில் மனித உரிமைகள் அமைப்புகளும் வழக்குத் தொடர்ந்திருந்தன. அவை கூட வெற்றிபெறாத நிலையிலேயே ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தற்காலிக தடை உத்தரவை வழங்கியிருக்கிறது. நாடு கடத்தப்படவிருந்த ஈராக்கியர் ஒருவர் சார்பிலேயே ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்திருந்தது.


குறித்த அகதித் தஞ்சக் கோரிக்கையாளரின் அகதிக் கோரிக்கை ருவாண்டாவில் நீதியான மற்றும் நியாயமான முறையில் கவனத்தில் கொள்ளப்பட வாய்ப்பில்லை என்பதாலேயே அவரது நாடுகடத்தலைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிப்பதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அது மாத்திரமன்றி, பிரித்தானிய அரசின் புதிய குடிவரவுச் சட்டம் தொடர்பில் ஐக்கிய இராச்சிய உச்ச நீதிமன்றம் எதிர்வரும் ஜுலை மாதம் இறுதித் தீர்ப்பை வழங்கவுள்ள நிலையில் தீர்ப்புக்கு முன்னதாக அவரை ருவாண்டாவுக்கு அனுப்பக்கூடாது என்ற உத்தரவையும் பிறப்பித்திருந்தது. அத்தோடு மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளாத ஒரு நாடாக உள்ள நிலையில் ருவாண்டாவில் மனித உரிமைகள் பேணப்படும் என்பதற்கான எந்த வித உறுதிப்பாடும் இல்லை என்கின்ற தனது அவதானத்தையும் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்தத் தீர்ப்பு வெளியானதையொட்டி கருத்துத் தெரிவித்த பிரித்தானிய உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் ‘தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. எனினும், இரண்டாவது விமானம் விரைவில் ருவாண்டா புறப்படும்” எனக் கூறியுள்ளார். அதேவேளை, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் பேச்சாளர்களுள் ஒருவர் ‘குறித்த தீர்ப்பு தனிமனிதர் ஒருவரின் வழக்கு சம்பந்தமானதே தவிர,பிரித்தானிய அரசின் ஒட்டுமொத்த குடிவரவுத் திட்டம் சம்பந்தமானதல்ல” என்கிறார். யார், என்ன கூறினாலும் தனது திட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்பதில் பொரிஸ் ஜோன்சன் அரசாங்கம் உறுதியாக உள்ளமை இவற்றின் மூலம் தெளிவாகின்றது.

அது மாத்திரமன்றி, அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பும் பிரித்தானியாவின் திட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் குறித்த நீதிமன்றம் தொடர்பான உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவது தொடர்பான செய்திகள் அரசாங்கத் தரப்பில் இருந்து வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகளாவிய மனித உரிமைக் காவலன் எனத் தன்னைப் பிரகடனம் செய்துள்ள பிரித்தானியா, இவ்வாறு அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களை மனிதாபிமானமற்ற வகையில் கையாள்வதும், தனது நடவடிக்கைகளுக்கு எதிராக மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தையே தூக்கியெறிய முனைவதும் அப்பட்டமான சர்வாதிகாரமே அன்றி வேறில்லை. பிரித்தானிய அரசின் ஒட்டுமொத்த குடிவரவுத் திட்டம் சம்பந்தமானதல்ல” என்கிறார்.


யார், என்ன கூறினாலும் தனது திட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்பதில் பொரிஸ் ஜோன்சன் அரசாங்கம் உறுதியாக உள்ளமை இவற்றின் மூலம் தெளிவாகின்றது. அது மாத்திரமன்றி, அகதிகளை ருவாண் டாவுக்கு அனுப்பும் பிரித்தானியாவின் திட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் குறித்த நீதிமன்றம் தொடர்பான உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவது தொடர்பான செய்திகள் அரசாங்கத்தரப்பில் இருந்து வெளியாகி உள்ளமை குறிப்பி டத்தக்கது. உலகளாவிய மனித உரிமைக் காவலன் எனத் தன்னைப் பிரகடனம் செய்துள்ள பிரித்தானியா, இவ்வாறு அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களை மனிதாபிமானமற்ற வகையில் கையாள்வதும், தனது நடவடிக்கைகளுக்கு எதிராக மனித உரிமைகள் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதும், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தையே தூக்கியெறிய முனைவதும் அப்பட்டமான சர்வாதிகாரமே அன்றி வேறில்லை.


அகதிப் பின்புலத்தைக் கொண்ட ஒருவரை உள்துறை அமைச்சராகப் பதவியில் வைத்துக் கொண்டே இத்தகைய அசிங்கத்தை நிறைவேற்றுவதை எவ்வாறு வர்ணிப்பது? இத்தகைய பின்புலத்தில், உக்ரேன் அகதிகள் தொடர்பான விடயம் மீண்டுமொரு முறை பேசுபொருளாக மாறியுள்ளது. தமது அரசியல் நலன்களுக்காக உக்ரேன் அகதிகளை இருகரம் நீட்டி வரவேற்கும் பிரித்தானிய அரசாங்கம், அதே தருணத்தில் தமது உயிர்களைப் பணயம் வைத்து பிரித்தானியாவுக்கு வருகை தந்த ஆசிய மற்றும் ஆபிரிக்க அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதை பல்வேறு மனிதாபிமான அமைப்புகள் கண்டித்துள்ளன. அதேவேளை, எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் நிழல் உள்துறை அமைச்சரான கூப்பர், பிரித்தானிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் வெட்கக் கேடானவை, வெறுக்கத்தக்கவை எனக் கூறியுள்ளார். ஆனால், சூரியன் மறையாத சாம்ராஜ்யம் என்ற காலனித்துவ மனோபாவத்திலிருந்து இன்றுவரை மாறாத பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்பது தொடர்ச்சியாக பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டே வருகின்றது. அதற்கான இறுதியான எடுத்துக்காட்டே அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களை ருவாண்டா அனுப்ப மேற்கொள்ளப்படும் முயற்சி.

credit to: சண் தவராசா

Spread the love