பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் கல்விசாரா ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பு

பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் கல்விசாரா ஊழியர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துநேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தினர் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பினால் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கைக்கு எதிராக நேற்று (09) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை பல்வேறு வகையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய, இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். சம்பளப் பிரச்சினை , பொருட்களின் விலை அதிகரிப்பு, அதிகரிக்கப்பட்ட வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நேற்று ஒரு மணித்தியாலம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு – வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக  விரிவுரையாளர்கள்,  கல்விசாரா ஊழியர்கள் இணைந்து அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராகவும் மின்சார  கட்டண அதிகரிப்பிற்கு எதிராகவும்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்வி சாரா ஊழியர்கள் இணைந்து அரசாங்கத்தின் வரிக்கொள்கை, பொருட்களின் விலையேற்றம், அரசாங்கத்தின் ஜனநாயக உரிமை மீறல்கள் உள்ளிட்ட விடையங்களை முன்வைத்து கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.  பல்கலைக்கழக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது. பேராதனை பல்கலைக்கழக  விரிவுரையாளர்களும் கல்விசாரா ஊழியர்களும்நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Spread the love