பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதான 8 பேர் விடுவிப்பு

கிளைமோர் குண்டுகளை உடைமையில் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 2019ஆம் ஆண்டு பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 3 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். 

மரியங்களம் பொலிஸாரால் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி இவர்கள் அனைவரும் கைது செய்ப்பட்டிருந்தனர். 9 ஆவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டிருந்த ஆனந்தராஜா என்பவர் கைது செய்யப்படவில்லை. அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஏனைய 8 பேருக்கும் ஆதரவாக சி. எச்.ஆர்.டி. சட்ட நிறுவனம் சட்ட உதவிகளை வழங்கியிருந்ததுடன் இவர்களுக்காக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவையும் தாக்கல் செய்திருந்தது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 43 ஆண்டுகளின் பின்னர் முதன் முதலில் அமைக்கப்பட்ட ஆலோசனைசபைக்கு, 8 பேர் சார்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கோரிக்கை ஆராயப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அதற்கு அமைவாக சட்டமா அதிபரால் 8 பேரும் பிணையில் விடுவிக்கப்படுவதற்கான கடிதம் உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் 8 பேரையும் பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவை வழங்கியது. அந்த உத்தரவுக்கு அமைவாக வவுனியா நீதிவான் நீதிமன்றால் 8 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரை முன்னிறுத்தி, விரைவில் விடுவிக்கப்படவுள்ள அரசியல் கைதிகளையும், கைது செய்யப்பட்டு குறுகிய காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும் இலங்கை அரசு விடுவித்து சர்வதேச சமூகத்தை ஏமாற்றவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அண்மையில் குற்றஞ்சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love