நாட்டின் ஜனநாயக உரிமை சட்டத்தின் ஆட்சி நிலவவேண்டும் – பத்திரிகை ஸ்தாபனம்

இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் அதன் அங்கத்துவ அமைப்புக்களும், பங்காளி அமைப்புக்களும் இணைந்து தற்போதைய அமைதியின்மை காலத்தில் அரசாங்கத்தின் எந்த மீறலும் இல்லாமல் ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி நிலவ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

இது குறித்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பிரதானமாக, பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம், கடமையில் இருக்கும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சிக்கான ஏனைய ஜனநாயக உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட வேண்டும். தற்சமயமுள்ள தனித்துவமான காலகட்டத்திலும் கூட, அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட பிரஜைகளின் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம், வெளியீடு, ஒன்று கூடுவதற்கான மற்றும் ஒன்றிணைவதற்கான சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் பேணப்படுவது இன்றியமையாததாகும். சமூக ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த மதிப்புக்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் வலியுறுத்துகின்றது.

இந்த முக்கியமான தருணத்தில் பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அமைதியான மற்றும் சட்டபூர்வமான முறையில் செயற்படவேண்டும் என்றும் அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் கேட்டுக்கொள்கின்றது என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love