தமிழக மீனவர்கள் 16 பேரை விடுவிக்குமாறு கோரி இந்தியப் பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 16 பேரையும் விடுவிக்குமாறு கோரி இந்தியப் பிரதமருக்கு தமிழக முதல்வர் M.K.ஸ்டாலின் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 16 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிரந்தரமாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் பாரதப் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி 106 மீனவப் படகுகளும் 16 மீனவர்களும் இலங்கை வசமுள்ளதாக சுட்டிக்காட்டிய தமிழக முதல்வர், விரைவில் விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்திகள் வௌியிட்டுள்ளன.

இதனிடையே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 16 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர் G.K.வாசன் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

தமிழக மீனவர்களின் பிரச்சினையில் உடனடியாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love