தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 21பேரின் விளக்கமறியலை எதிர்வரும் 22ஆம் திகதிவரை நீடித்தது பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியலை நீடிக்க உத்தரவிட்டது பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம். கடந்த 31ஆம் திகதி பருத்தித்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். பருத்தித்துறைக் கடற்பரப்பில் இழுவைப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சமயம் பருத்தித்துறை மீனவர்கள் இழுவைப் படகுகளை முற்றுகையிட்டு தமிழக மீனவர்களை மடக்கிப் பிடித்திருந்தனர். அதன்பின்னர் இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கைது செய்த நிலையில், நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள், தமிழக மீனவர்களை நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.

அவர்களை நேற்றுவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. தமிழக மீனவர்களின் விளக்கமறியலை நீடித்த பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம், மீனவர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கும் அனுமதி வழங்கியது. அத்துடன் தமிழக மீனவர்களின் படகில் இருந்து கைப்பற்றப்பட்ட 100 கிலோவுக்கும் அதிகமான மீன்களை விற்பனை செய்வதற்கு மன்றில் அனுமதி கோரப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம் விற்பனை செய்யும் பணத்தை மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

Spread the love