ஜி-7 உச்சி மாநாடு ஜேர்மனியில் ஆரம்பம்

ஜி-7 தொழில்வள செல்வந்த நாடுகள் கூட்டிணைந்து தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ள அதேநேரம், உக்ரைன் போர் விவகாரத்தில் ஒரே குரலில் பேசவும் இணங்கியுள்ளன. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் ஆகிய 7 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஜி-7 அமைப்பின் 48ஆவது உச்சி மாநாடு ஜெர்மனியின் ஸ்லாஸ் எல்மவ் நட்சத்திர விடுதியில் நேற்று முன்தினம் ஆரம்பமானது. தொடர்ந்து இன்று வரை இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

மாநாட்டின் முதல் நாளான நேற்று முன்தினம் ரஷ்யா ஊடுருவலால் ஏற்பட்ட தாக்கங்கள், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிசக்தி விநியோகத்தை பாதுகாப்பது, பணவீக்கத்தை சமாளிப்பது குறித்து ஜி-7 நாடுகள் ஆலோசித்தன. உக்ரைன் மீது போர் தொடுத்ததற்காக ரஷ்யாவை தண்டிக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன, இந்த மாநாட்டில் கருத்து வெளியிட்ட ஜேர்மனி ஆட்சித் தலைவர் ஒலாப் சோல்ஸ் (Olaf Scholz), ஒற்றுமைதான் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்குத் தரக்கூடிய தெளிவான செய்தி என்றார்.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson), போர் அழுத்தமும், குழப்பமும் தருவதை ஒப்புக்கொண்டார். ஆனால் போரின் போக்கை மாற்றக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதாகத் ஜோன்சனும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மாக்ரோனும் (Emmanuel Macron) தங்களது இருதரப்பு பேச்சில் குறிப்பிட்டதாக ஜோன்சனின் பேச்சாளர் தெரிவித்தார். மேற்கத்திய நாடுகளின் ஒற்றுமை உடையும் என்பதே ரஷ்ய ஜனாதிபதி புடினின் நம்பிக்கை எனத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், ஆனால் அது நடக்காது எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

Spread the love