ஜப்பான் – சகுராஜிமா எரிமலை வெடிப்பு

தெற்கு ஜப்பான் – ககோ ஷிமாவில் உள்ள சகுராஜிமா எரிமலை நேற்று முன்தினம் இரவு வெடித்து எரிமலைக் குழம்புகளை வெளியிட ஆரம்பித்தது. பெருமளவு சாம்பலும் எரிமலையில் இருந்து வெளியேறி வருகிறது. இதனையடுத்து சகுராஜிமா மலைப் பகுதியைச் சூழவுள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டனர்.

நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி 8 மணிக்கு எரிமலை வெடிக்க ஆரம்பித்து பல மீற்றர் உயரத்துக்கு பெரிய சுவாலைகள் வெளியானதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிமலை வெடிப்பை அடுத்து அபாய எச்சரிக்கை ஐந்தாம் நிலைக்கு உயர்த்தப்பட்டது.

இதன்மூலம் மலைப்பகுதிக்கு ஆட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் மூன்றாம் நிலை எச்சரிக்கை அமுலில் இருந்தது. ஜப்பானில் ஏராளமான சுறுசுறுப்பான எரிமலைகள் உள்ளன. ஜப்பான் பசிபிக் எரிமலை வளையம் என்று அழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ளது. இதனால் இந்நாடு அடிக்கடி நில நடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.

Spread the love