ஜனாதிபதி ரணில் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க சர்வதேசம் முன்வர வேண்டும்

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றிடமிருந்து தேவையான நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க சர்வதேசம் முன்வர வேண்டும் என சர்வதேச ஜனநாயக ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சர்வதேச ஜனநாயக ஒன்றியம், கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தின் தவறான நிர்வாகமும் ஊழலும் நாட்டை வீழ்ச்சியடையச் செய்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய அனுபவமிக்க அரசியல்வாதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆவார்.

6 தடவைகள் இலங்கையின் பிரதமராக இருந்த அவர், தனது நல்லாட்சிக்கு சர்வதேசத்தின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்றுள்ளதுடன், மக்களின் நலனுக்காக அரசியல் நெருக்கடிகளை தீர்க்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியும் உள்ளார். எனவே, நாட்டை நெருக்கடியிலிருந்து விடுவிப்பதற்கும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றிடமிருந்து தேவையான நிதி உதவிகளைப் பெறுவதற்கும் இலங்கை ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து சர்வதேச நண்பர்கள் மற்றும் பங்காளிகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love