ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையே வெடித்துள்ள அதிகார மோதல் 

தற்போது நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவித்து வரும் நிலையில், அரச தலைவர் கோட்டாபயவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையே அதிகார மோதல் வெடித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவரும் இணைந்து செயற்படுவதற்கு பதிலாக அதிகார மோதலில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருவரும் ஒன்றாக அமர்ந்து ஒரே துறை தொடர்பான பிரச்சினைகளைப் பேசுவதற்குப் பதிலாக, ஒரே துறையை சேர்ந்த அதிகாரிகள் இருவேறு சந்தர்ப்பங்களில் வரவழைக்கப்படுகிறார்கள். இது முழுமையான நேர விரயம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விவசாயம் மற்றும் சுற்றுலா துறைகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அரச தலைவரும் பிரதமரும் இரண்டு தடவைகள் தனித்தனியாக கூட்டங்களை கூட்டியுள்ளனர். கடந்த திங்கட்கிழமை பிரதமரால் சுற்றுலாத் துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டு அதிலுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடிய நிலையில் மீண்டும் அதே அதிகாரிகளை வெள்ளிக்கிழமை அரச தலைவர் அழைத்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.

கோட்டாபய -ரணில் இடையே வெடித்தது அதிகார மோதல்

ஹரின் பெர்னாண்டோவால் ஏற்பட்ட சர்ச்சை

இதேவேளை சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரச தலைவரால் கூட்டப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்ளாத அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, பிரதமர் நடத்திய கலந்துரையாடலில் கலந்து கொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதே விவகாரம் தொடர்பாக அரச தலைவர் மற்றும் பிரதமரை தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதன் பின்னர் இருவரும் பரஸ்பர ஆலோசனை மற்றும் உத்தரவுகளை பிறப்பிப்பார்கள் எனவும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Spread the love