சுயாதீனமாக இயங்கும் எம்.பிக்கள்  ஜனாதிபதி சந்திப்பு புறக்கணிப்பு

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடனான சந்திப்பை பகிஷ்கரிப்பதற்கு அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் எம்.பிக்கள் தீர்மானித்துள்ளனர். இதன்படி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, ஜனாதிபதி மாளிகையில் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த சந்திப்புக்கு செல்லாதிருப்பதற்கு அவர்கள் முடிவெடுத்திருந்தனர்.

தமது அணியில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரான சாந்த பண்டாரவை, அரசாங்கத்தின் பக்கம் இழுத்து அவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியை வழங்க நடவடிக்கை எடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஜனாதிபதியுடனான சந்திப்பை பகிஷ்கரிக்க அவர்கள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. 

புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைத்து தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்று வலியுறுத்திவரும் நிலையில் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் 11 கட்சிகளின் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன்போது புதிய பிரதமரை நியமிக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி இணங்கியிருக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் ஜனாதிபதியுடன் பேச்சுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று இரவு இந்த சந்திப்பு நடக்கவுள்ளதாக முன்னர் கூறப்பட்டது. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட சுயாதீனமாக இயங்கும் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் அதில் கலந்துகொள்ளாதிருப்பதற்கு முடிவெடுத்துள்ளனர்.

Spread the love