சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் 35சதவீதத்தை மாத்திரமே இலங்கை பூர்த்தி செய்துள்ளது

சர்வதேச நாணய நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளில் 35சதவீதத்தை மாத்திரமே இலங்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் பகுப்பாய்வு செய்வதற்காக வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் அறிமுகப்படுத்திய வேலைத்திட்டத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் 57 சதவீதமான நிபந்தனைகள் இந்த வருடம் ஜுலை மாதத்திற்குள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். இந்தநிலையில் 35 சதவீதமான நிபந்தனைகளை மாத்திரமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தைகளுக்கு அமைய இலங்கை தமது நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என வெரிட்டே ரிசேர்ச் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பரில் இடம்பெறவுள்ள முதல் மறுபரிசீலனைக்கு முன்னர்இ இலங்கை அரசாங்கம் 71 சதவீத நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் இருப்பினும், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் 18 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என வெரிட்டி ரிசேர்ச் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, அடுத்த மாதம் 14ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

குறித்த குழுவினர், செப்டெம்பர் 27ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் எனவும், இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் முதலாவது மீளாய்வுக்காக தமது பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்யப்பட்ட நிபந்தனைகளில் 80 சதவீதமானவை தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Spread the love