சர்வகட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ள சர்வகட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளதாக சிரேஷ்ட கட்சித் தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம், நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் 13 ஆவது திருத்தம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்தியாவிற்கு விஜயம் செய்வதற்கு முன்னர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களும் முழுமையான அதிகாரப் பகிர்விற்கு இணங்கினால் மாத்திரமே 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியும் என ஜனாதிபதி கூறியிருந்தார்.

Spread the love