சபாநாயகருக்கு எதிராக சஜித், எதிர்க்கட்சியின் 34 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கடிதம்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் செயற்பாடுகள் தொடர்பாக எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியின் 34 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகரின் பக்கசார்பான செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட உள்நாட்டு கடன் மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பிலான பிரேரணையை நிறைவேற்றும் போது,  எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துகளை வௌியிடுவதற்கிருந்த வாய்ப்புகளை சபாநாயகர் தடுத்ததாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 9 மணி தொடக்கம் இரவு 9.30 வரை விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் இரவு 7.30 அளவில் வாக்கெடுப்பை நடத்துவதற்கு சபாநாயகர் மேற்கொண்ட தீர்மானத்தினால் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சபாநாயகர் இதற்கு முன்னரும் பாராளுமன்றத்தில் இவ்வாறு செயற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Spread the love