கோட்டாபயவினால் பொதுமன்னிப்பு வழங்கிய துமிந்த சில்வா; எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்கள்

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் நேற்று (20) உச்ச நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

மேலும் மனுக்கள் மீதான விசாரணையை வரும் 30ம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை எதிர்த்து, படுகொலை செய்யப்பட்ட பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர, மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான அதிபர் சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் நேற்று (20) பிரிதி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் ஆஜரான அதிபர் சட்டத்தரணி கே.கனகேஸ்வரன், பிரதிவாதி துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் அதிபர் எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என நீதிமன்றில் முன்னிலையாகி குறிப்பிட்டார்.

எனினும், மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள துமிந்த சில்வா சார்பில் முன்னிலையான அதிபர் சட்டத்தரணி மனோஹர டி சில்வா, முன்னாள் அதிபர் தனது கட்சிக்காரருக்கு அதிபர் பொதுமன்னிப்பு வழங்குவதில் முறையான சட்ட விதிகளை பின்பற்றியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

Spread the love